Sunday, April 29, 2012

தனிமையின் துணையில்

ஓயாமல் ஓசையிடும் கடலலையின் கரையினிலே
காயாத கனியாத ஈர நினைவுடனே
துணையொன்று தானின்றி ஒருமையில் நின்றேன்
தேயாமல் நீ என்றும் துணை வருவாய் என்றே!

மென்தென்றல் தீண்டலால் கூடிட்ட குளிரோ - அன்றி என்
கண்கொட்டாப் பார்வையினால் தோன்றிட்ட நாணமோ
கருமேகச் சேலைகொண்டு கவின்முகம் மறைத்தாயே
கடைக்கோடிக் காதலனின் சிறுநெஞ்சைச் சிதைத்தாயே!

பக்கம் வர எண்ணமில்லை பார்வையது போதுமே
பரிதியவன் பார்வை பட்டால் இன்றிரவும் போகுமே
ஊனுருகி உயிருருகி உனை எண்ணித் தவிக்கின்றேன்
ஊடலைக் களைந்தென்னை உவகையில் ஆழ்த்தாயோ!