Saturday, May 18, 2013

கள்ளக் கத்திரி


கத்திரியின் காலமின்னும் கனியவில்லை என்று
கணக்கிட்டுக் கூறுவதில் இனி பலனில்லை போலும்!

நித்தம் கூடிவரும் கதிரவனின் கொதிவெப்பம்
நிர்ணயக் கணக்குகளை நிந்தித்தது போலும்!

விடிகாலை வெதுவெதுப்பில் விழிமலர்ந்த அக்கணம்
விடையொன்று உதித்தது பகலவன்போல் பளிச்சென்று!

கணக்கில் பிழையில்லை சரிதான் போலும் - இது
காமுற்றக் கதிரவனின் சதிதான் போலும்!

நிலமகளை நெருங்கி வரும் நியமந்தன்னை
நீட்டுவிக்க ஏங்கி இடும் நாடகம் போலும்!

கள்ளன் வெறும் கதிரவனா? இல்லை போலும்
கள்ளியாம் நிலமகளும் கூட்டணி போலும்!

திங்களுக்கு மும்முறை மேகம் கூட்டித்
தேம்பியவள் காக்கும் அமைதி சாட்சி போலும்!

No comments:

Post a Comment